செவ்வாய், 13 மே, 2014







அகத்தியர் வரலாறு:-

        ரிக் வேதத்தில் அகத்தியருடைய பிறப்பு கூறப்படுகின்றது. கடும் விஷங்களை நீக்கக் கூடிய மந்திரங்களை அகத்தியர் செய்தார். அவை ரிக் வேதத்தில் 1-191வது ரிக்காக விளங்குகின்றன. இதனை மௌனமாய் உச்சரிக்க, சகல விஷத் தொல்லைகளும் நீங்கும்.
     கேலன் என்ற மன்னனுக்குப் புரோகிதராய் இருந்தார். அப்போது ரிக் வேதத்தில் 1-165-192-ல் இருக்கும் ரிக்குகளைச் செய்தார்.


      அகத்திய மாமுனி காலத்தைக் கடந்த,காலத்தை வென்ற ஒரு மாமுனிவர். முன்பிறப்பில் அவருக்கு ஜடராக்கினி, தஹராக்கினி என்பன பெயர்கள் என பாகவதம் அறிவிக்கின்றது.
      ஸ்வாயம்புவ மன்வந்திரத்தில் தத்தோளி என்ற திருநாமத்துடன் விளங்கினார் என விஷ்ணுபுராணமும் முழங்குகின்றது.
      சுகேது என்னும் யட்சன் பிரம்மாவை நோக்கித் தவம் புரிந்தான். அவர் அருளினால் ஒரு பெண் குழந்தையை அடைந்தான். தன் மகளுக்குத் தாடகை என்று பெயரிட்டான். சுகேது தக்க பருவத்தில் தாடகையை ஜர்ஜன் என்னும் யட்சனின் மகனாகிய சுந்தன் என்பவனுக்கு மணமுடித்தான்.


    சுந்தனுக்கும், தாடகைக்கும் மாரீசன், சுபாகு என்னும் இரண்டு குமாரர்கள் பிறந்தனர். ஒரு நாள் சுந்தன் அகத்தியரின் ஆசிரமத்தை அடைந்தான். ஆணவத்தாலும் காமத்தாலும் மதிகெட்ட அவன் ஆசிரமத்தில் இருந்த மரங்களைப் பெயர்த்து எறிந்தும், மான் முதலிய ஜீவன்களைக் கொன்றும் ஆசிரமத்தை அழித்தான். தவச்சாலை பிணச்சாலை ஆனது. அகத்தியர் கோபங்கொண்டு பார்க்க, சுந்தன் சாம்பல் ஆயினான்.
   கணவன் இறந்ததை அறிந்த தாடகை தன் குமாரர்களுடன் அகத்தியர் இருக்கும் இடம் வந்தாள். அகத்தியரைக் கொல்ல எண்ணி அவர் மீது மூவரும் பாய்ந்தனர். அழிவன செய்தமையின் மூவரும் அரக்கர் ஆகுக! என அவர் சபிக்க மூவரும் அரக்கர் ஆயினர்.

    இவர்களை இராமபிரான் வதைத்த வரலாறு இராமாயணத்தினுள் காணலாம்.
    இனி, பிதுர்வாக்ய பரிபாலனம், மாத்ரு வாக்கிய பரிபாலனம் என்னும் அறத்தினை மேற்கொண்டு இராமன் வனவாசம் செல்கையில், தண்டகாரண்யத்து மகரிஷிகள் அனைவரும் அவனிடம் சென்று இராவணனால் படும் துயரங்களைக் கூறிச் சரண் புகுந்தனர்.
    சரணாகத வத்சலனான இராமன் அவர்களை ஆதரித்து, அரக்கரை அழிப்பதாக வாக்குறுதி தந்தனன். பின் அங்கிருந்து அகத்தியரின் ஆசிரமம் சென்றனன்.
           தன் ஆசிரமம் வந்த இராம, இலக்குவர்களை அகத்தியர் வரவேற்றார். அகத்தியர் அருள் கிடைத்தமையால் தனக்கு அனைத்தும் கிடைத்ததாக இராமபிரான் மகிழ்ந்தான்; எனில் அகத்தியரின் பெருமைதான் என்னே! என்னே!. பின் அகத்தியர் இராமபிரானுக்கு வில்லையும், நாராயண அஸ்திரத்தையும், வாள் ஒன்றினையும் கொடுத்தார். முடிவில் அவர்களைப் பஞ்சவடியில் தங்கியிருக்குமாறு அகத்தியர் வழியனுப்பி வைத்தார். இவை இராமாயணத்தில் காணப்படுவனவாம்.

    வனம் ஒன்றின் வழியாக அகத்தியர் சென்று கொண்டிருந்தார். தன் முன்னோர்கள் (பித்ருக்கள்) பெரும் பள்ளத்தில் ஒரு மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களின் துன்பத்திற்குக் காரணம் கேட்டார். "அகத்தியா! நீ இல்லறத்தில் ஈடுபடவேண்டும். ஆண் சந்ததி ஒன்றைப் பெற்றெடுக்க வேண்டும். அப்போதுதான் எங்கட்கு இந்த யம தண்டனை தீரும்" என்றனர்.
     முன்னோர்களைக் கரையேற்ற எண்ணிய அகத்தியர், திருமணத்தில் எண்ணங்கொண்டார். விதர்ப்பராஜன் மகள் லோபமுத்திரையை மணந்தார். இளவரசிக்கு உரிய கோலங்களை நீக்கித் தவக்கோலம் கொண்டவளாக லோபமுத்திரையை மாற்றி அழைத்துக் கொண்டு கானகம் சென்றார்.
     நீண்ட நாள் கழித்து முன்னோர்களை எண்ணிய அகத்தியர், சந்ததி விருத்தி செய்ய எண்ணி லோபமுத்திரையை நாடினார். ஆனால் லோபமுத்திரையோ அகத்தியரை வணங்கி “சுவாமி! ஆண், பெண்ணை மணந்து கொள்வது புத்திரப்பேற்றினுக்குத்தான். நான் தங்களிடம் வைத்துள்ள பிரியத்தைப் போல நீங்களும் என் மீது பிரியம் வைக்க வேண்டும். இந்த பர்ணசாலையில் தவத்தைத் தவிர வேறு ஒன்றனையும் என்னால் எண்ண முடியவில்லை.

      தாங்கள் ஓர் அரண்மனை கட்ட வேண்டும். நான் அதில் ஆடை, ஆபரணங்கள், இதர சௌக்கியங்களுடன் இருந்து, உங்கள் மகனைப் பெற ஆசைப்படுகின்றேன்,“ என்று தன் உள்ளத்தில் இருப்பதை மறைக்காமல் கூறினார். சிற்றின்பத்திற்காக தவத்தை இழக்க விரும்பாத அகத்தியர், மன்னர்களிடம் யாசகம் பெறச் சென்றார். சுருதர்வா என்ற மன்னனிடம் சென்றார். மன்னன் அவரை வரவேற்று வேண்டிய பொருள்களை எடுத்துச் செல்லுங்கள் என்று வேண்டினான்.
    மறுத்த அகத்தியர் மன்னனிடம் வரவு, செலவு கணக்கைக் கேட்டார். கணக்கைப் பரிசோதிக்க வரவிற்கும், செலவிற்கும் சரியாய் இருப்பதைக் கண்டு, “உன்னிடம் நான் தானம் பெறுவது பாவம்“ என்று கூறி வேறு மன்னனிடம் புறப்பட்டார். அத்தனை மன்னர்களிடத்தும் உபரியாக நிதி இல்லாமையால் யாரிடமும் தானம் பெறாது சென்றார் அகத்தியர்.

    (பண்டைக்காலம் முதலே நம் மன்னர்கள் வரவு செலவு திட்டம் (பட்ஜெட்) வைத்திருந்தனர் என்பதும், குடிமக்களிடமிருந்து வரவு ஆகும் பொருளையெல்லாம் திரும்பவும் குடிமக்களுக்கே செலவு செய்தனர் என்பதும், அரசன் பொருளைக் கண்டபடி செலவு செய்யவில்லை என்பதும், முன்னோர்கள் நமக்கு வைத்துச் சென்ற அரசியல் அனுபவ நீதியும், நிதியுமாகும்.)
     அரசர்கள் அனைவரும் அகத்தியருடன் ஆலோசித்தனர். ‘தவநிதியே! மணிமதி என்னும் நகரில் இல்வலன் என்ற அசுரன் அளவற்ற செல்வம் உடையவனாய் வாழ்கின்றான். அவனிடம் யாசிப்போம் என்று முனிவரை அழைத்துச் சென்றனர்.
    இல்வலன் தவசிகளைக் கொன்று தின்னும் பழக்கமுடையவன். முனிவர் கோலம் தரித்து அவன் முனிவர்களைத் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்வான், தன் தம்பியை ஆடாக்கிச் சமைத்து, அதனை முனிவர்களுக்குப் பரிமாறுவான். முனிவர்கள் உண்டு முடித்தபின்."வாதாபி வா!"என்று அழைத்தால் வாதாபி உருவம் பெற்று, முனிவரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வருவான். பின் இருவரும் இறந்த முனிவரின் உடலைத் தின்று பசியாறுவர்.

    இல்வலன் அகத்தியருக்கும் தன் தம்பியை உணவாக்கிப் பரிமாறினான். அகத்தியரும் உண்டார். வழக்கப்படி வாதாபி வா! வா!  எனப்பலமுறை அழைத்தும் வாதாபி வரவில்லை. அகத்தியர் அவனை ஜீரணமாபி எனக் கூறி ஜீரணித்து விட்டார். பிரம்மாவின் வரத்தையும் வெல்லும் ஆற்றல் அகத்தியருக்கிருந்தது.
    இல்வலன் அகத்தியரை வணங்கினான். சுவாமி! வேண்டியது என்னவோ? என்றான். இல்வலா! பிறர்க்குத் துன்பம் இல்லாமல் உன்னால் முடிகின்ற தனத்தைக் கொடு என்றார். ஆனால் அசுரனோ, நான் இவ்வளவு கொடுக்கப் போகிறேன் என்பதைச் சொன்னால் கொடுக்கிறேன் என,
    இந்த அரசர்கள் ஒவ்வொருவருக்கும் பதினாயிரம் தங்க நாணயங்களையும், எனக்கு அதைப்போல் இருமடங்கும் ஒரு தங்க ரதமும் மனோ வேகமுள்ள இரண்டு குதிரைகளையும் தரப்போகின்றாய் என்றார். அசுரனும் அவ்வாறே கொடுக்க ரதம் அடுத்த வினாடி அகத்தியரை அவர் ஆசிரமத்தில் சேர்த்தது.
    ஆனால் அசுரன் அரசர்களையும், அகத்தியரையும் பின் தொடர்ந்து வந்தான். அனைவரையும் வஞ்சித்துக் கொன்று கொடுத்ததைத் திரும்பக் கவர்ந்து செல்ல வேண்டும் என்பது அவன் எண்ணம். அரசர்கள் அஞ்சி அகத்தியரை வேண்ட, தீயவனை ஒரு ஹீங்காரத்தால் அழித்தார்.
     அசுரர்களான இல்வலன், வாதாபி இருவராலும் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை இங்ஙனம் உலக மக்கட்குப் பயன்படச் செய்தார்.
     தம் இருப்பிடம் அடைந்தார். மனைவியிடம் “ஆயிரம் புதல்வர் வேண்டுமா? அல்லது ஆயிரம் புதல்வர்க்கு நிகரான ஒரு புத்திரன் வேண்டுமா?“ எனக் கேட்க, அவ்வம்மையார், “வித்தையிலும், விநயத்திலும், சீலத்திலும்,ஞானத்திலும், ஒப்பில்லாத ஒரே புத்திரன் வேண்டும்,“ என வேண்ட, அகத்தியர் அருளினால், த்ருடாயு என்னும் புதல்வன் வேதங்களை உச்சரித்துக் கொண்டே பிறந்தான். த்ருடாயு வளர்ந்து யாகசாலைக்குத் தேவையான ஹோம திரவியங்கள், விறகுகள் இவற்றை நாள்தோறும் சுமந்து வந்ததால் அப்புதல்வன் இத்மவாஹனன் எனப்பட்டான். அகத்தியரின் முன்னோர்களும் யமதண்டனை நீங்கிச் சுவர்க்கம் புகுந்தனர்.
      இந்திரன் பிரம்மஹத்யா தோஷத்தினால் ஒரு முறை இந்திரலோகத்தை விட்டு ஓடியொளிந்தான். பாண்டவர்களின் முன்னோனும் சந்திரகுல மன்னனுமாகிய நகுஷன் அசுவமேதயாக பலத்தால் இந்திரன் ஆயினன்.
     செருக்கினால் சீரழிந்தான் அவன். இந்திராணியைக் காமுற்றான். தன் பெருமையை அவள் அறிந்து மதிக்க வேண்டுமென எண்ணினான். இதுவரை எந்த இந்திரனும் பயன்படுத்தாத ஒரு வாகனத்தில் செல்ல வேண்டும். அதுவே தன் பெருமைக்கு தகுந்தது என முடிவு செய்து சப்தரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் இந்திராணி இருப்பிடம் சென்றான்.
     பல்லக்கின் முன்புறத்தில் குள்ளமான திருமேனியுடைய அகத்தியர் சுமந்து சென்றார். அதனால் பல்லக்கு மெதுவாகச் சென்றது. காமவேகம் கொண்டிருந்த நகுஷன் பல்லக்கு வேகமாகச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் “ஸர்ப்ப! ஸர்ப்ப! (வேகமாகச் செல்) என்று கூறி அகத்தியரைக் காலால் தீண்டினான்.
     அகத்தியர் உடனே “ஸர்ப்போ பவ“ (பாம்பாக மாறுவாய்) என்று சபித்தார். இங்ஙனம் அவர் ஓர் அபலையின் கற்பினைக் காத்தார். இந்த நகுஷன் பின்னாளில் பாண்டவர் வனவாச காலத்தில் பீமனைப் பிடிக்க, அவனைக் காப்பாற்ற வந்த தருமனிடம் தருமத்தின் சூட்சுமங்களைக் கேட்டுணர்ந்து சாபவிமோசனம் பெற்றான். இவ்வரலாற்றை மகாபாரத்தினுள் காணலாம்.
      பார்வதி தேவியாரின் திருக்கல்யாணத்தைத் தரிசிக்க தேவர்கள், முனிவர்கள் மற்றும் உள்ள திரிலோக வாசிகள் அனைவரும் இமயமலையில் கூடினர். இவர்களின் பாரதத்தைத் தாங்காது வடதிசை தாழ்ந்தது. தென்திசை உயர்ந்தது. உலகினை அழிவிலிருந்து காக்கத் திருவுள்ளம் பற்றிய சிவபிரான் அகத்தியரைத் தென்திசைக்கு அனுப்பினார். இறைவனின் ஆணையை ஏற்ற அகத்தியர் தென்திசை வந்தார். உலகம் சீர் பெற்றது.
       சிவபிரான் முதல் அனைவரும் ஒரு தட்டில். அகத்தியர் ஒரு தட்டில் என்றால் அவர் தம் பெருமையை என்னென்பது? தம் திருக்கல்யாண கோலத்தை அகத்திய முனிபுங்கவருக்கு அவர் இருந்த இடத்தில் காட்டி அருளினார் சிவபிரான்.
     அகத்தியர் ஒரு நாள் திருக்கயிலை மலையில் இதுவரை தாம் உணர்ந்து அறியாத திவ்விய நறுமணம் ஒன்றினை உணர்ந்தார். அதனைப் பற்றி கயிலைநாதனிடம் வினவினார். அந்த நறுமணம் அங்கிருந்த ஓலைச்சுவடிகளின் நறுமணம் என அறிந்தார். அச்சுவடிகளில் இருந்த மொழி நறுமணத்தோடு, இனிமையும் மிகுந்து இருந்ததால் அதனைத் தமிழ் என்றார். அம்மொழியே தமிழ் மொழியாம்.
     “என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான்“ (கம்பராமாயணம்)
   சிவபிரான் தமிழ் மொழியை அவருக்கு உபதேசம் செய்தார். தமிழ்மொழியுடன்தான் அகத்தியர் தென்திசை வந்தார். காடு திருத்தி நாடாக்கினார். 1) த்ருணதூமாக்கினி (தொல்காப்பியர்) 2) அதங்கோட்டு ஆசான் 3) துராலிங்கர் 4) செம்பூட்சேய் 5) வையாபிகனார் 6) வாய்ப்பியனார் 7) பனம் பாரணனார் 8) கழாரம்பனார் 9) அவினயனார் 10) காக்கை பாடினியார் 11) நற்றத்தனார் 12) வாமனனார் என்னும் பன்னிருவருக்குத் தமிழ்மொழியை உபதேசம்  செய்தார்.
   1) எழுத்திலக்கணம் 2) சொல்லிலக்கணம் 3) பொருளிலக்கணம் 4) யாப்பிலக்கணம் 5) அணியிலக்கணம் – என்ற ஐவகை இலக்கணங்கள் அடங்கிய “அகத்தியம்“ என்னும் தமிழ் இலக்கண நூலை இயற்றினார்.
    அகத்தியர் தென்திசை வருங்காலத்தில், மேரு மலையுடன் பகைகொண்ட விந்திய மலை அதனுக்குப் போட்டியாக வளரத் தொடங்கியது. கர்வம் கொண்ட விந்தியம் முனிபுங்கவருக்கு வழிவிடவில்லை. தம் கரத்தை பிரும்மாண்டத்தின் எல்லை வரை உயர்த்தினார்; விந்தியத்தின் உச்சிமீது வைத்தார். அழுத்தினார். விந்தியம் தாழ்ந்தது.
    “நாகமது நாகமுற நாகமென நின்றான்“ (கம்பராமாயணம்)
     சூரபன்மாவின் தங்கை அஜமுகி அவள் பிள்ளைகள் அகத்தியரைக் கொல்ல வர, அவர்களைப் பாசுபத அஸ்திரத்தினால் அழித்தார். போகும் வழியில் கர்வத்துடனிருந்த இந்திரத்துய்ம்மனன் என்னும் பாண்டி மன்னனை யானையாகச் சபித்தார். இவனே கஜேந்திரன் எனப்பட்டான்.
    திருக்குற்றாலத்துப் பெருமானை ஹரிஹரரூபமாய் தரிசித்தார். அதன்பின் ஒரு திருத்தலத்திற்குச் சென்றார். இறைவனை தரிசனம் செய்ய, ஆனால் திருக்கோயில் சாத்தப்பட்டு இருந்தது. வண்டின் வடிவம் (ஈ) கொண்டார். மலர்களில் இருந்த தேனை எடுத்து அபிஷேகம் செய்தார். இங்ஙனம் வண்டின் (ஈ) வடிவம் கொண்டு அகத்தியர் வழிபட்ட தலமே திருஈங்கோய்மலை.
    இந்திரன் சிவபூசனைக்காக நந்தவனம் வைத்தான். சூரபன்மனின் ஆணையால் மழை பெய்யாது நந்தவனம் வாட, இந்திரன் மனம் வாடினான். விநாயகனை வேண்டினான். அவர் காக்கை வடிவம் எடுத்துச் சென்று அகத்தியரின் கமண்டல தீர்த்தத்தைக் கவிழ்த்தார். கமண்டல கங்கை பெருக்கெடுத்தது. இந்திரனின் நந்தவனம் செழித்தது. கா, விரியும்படி இந்நதி பெருகியதால் காவிரி எனப்பட்டது.
     காய்சின வழுதி (வழுதி – பாண்டியன்) அகத்தியரை முன்னிட்டுக் கொண்டு தமிழ் ஆராய்ந்தான். இது தலைச்சங்கம் எனப்படும். புதிதாக நூல் செய்பவர் சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டது. அகத்தியரின் இலக்கணம் பரவிய நாடுகள் செந்தமிழ் நாடு எனவும் மற்றவை கொடுந்தமிழ் நாடு எனவும் அழைக்கப்பட்டன.
    “தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி
    பன்றி யருவா வதன்வடக்கு – நன்றாய்
    சீதம்ம லாடு புனநாடு செந்தமிழ்சேர்
    ஏதமில் பன்னிநொட் டெண்“ 
    தம் குலகுருவான வியாழ பகவானை அவமதித்து அதனால் பெருந்தொல்லைகளுக்கு ஆளானான் இந்திரன். விருத்திராசூரனிடம் தோல்வியடைந்து பதவியிழந்தான். பின் ததீசிமுனிவரின் முதுகெலும்பினால் புதிய வஜ்ஜிராயுதம் செய்து அதனால் அசுரனைக் கொன்றான். மற்ற அசுரர்கள் கடலில் ஒளிந்து கொண்டனர். இரவு நேரத்தில் வெளிப்பட்டு முனிவர்களைக் கொன்றனர். சாதுக்கள் இதனால் அவதிப்பட்டனர். யாக, யக்ஞங்கள், ஜப, தபங்கள் அழிந்தன. ஹோமார்ச்சனைகள் நின்றன. பூமி ஒளியிழந்தது.
    தேவாதி தேவர்கள் அனைவரும் நடுநடுங்கி, இந்திரனை முன்னிட்டுக் கொண்டு மகா விஷ்ணுவைச் சரண் புகுந்தனர். எம்பிரான் அனைவரையும் அகத்தியரிடம் அனுப்பினான். அனைவரும் அவரிடம் வந்து அவர்தம் மகிமைகளைக் கூறிக் கொண்டாடினர்.
    கருணை கனிந்த அகத்தியர் அவர்கட்கு அருள் பாலித்தார். கடற்கரை சென்றார். தம் தவ வன்மையால் கடல்நீரை ஒரு சொட்டு நீரைப் போல சுருக்கினார். பின் அதனை உண்டார். சகலரும் இதனைக் கண்டு அதிசயித்தனர். தேவர்கள் கடலுள் சென்றனர். அசுரர்களை எதிர்த்துப் போரிட்டனர். முனிவர்களுக்குச் செய்த அபராதத்தினால் வலிமையிழந்த அசுரர் தோற்றனர்; அழிந்தனர். சிலர் பாதாளம் சென்று மறைந்தனர். இங்ஙனம் அனைவரின் அச்சத்தையும் அகத்தியர் அகற்றினார்.
   மைத்ரா வருணரின் ஒளியினால் கலசத்திலிருந்து பிறந்ததால் கும்பசம்பவர் என்றும் கலசயோனி என்றும் அழைக்கப்படுகின்றார். இவரால் செய்யப்பெற்ற சம்ஹிதை ஒன்று வேதங்களில் விளங்குகின்றது. அஃது அகத்திய சம்ஹிதை என்று பெயர் பெற்றுள்ளது.
    வெகுகாலத்திற்கு முன் தாரகன் என்னும் அரக்கனும் அவனைச் சார்ந்தவர்களும் உலகினைத் துன்புறுத்தினர். அவர்களை அழிக்க எண்ணிய இந்திரன் அக்நி, வாயு இவர்கள் துணைகொண்டு பூமிக்கு வந்தான். தேவர்களைக் கண்ட அசுரர் கடலில் அஞ்சி மறைந்தனர். பின் அவர்கள் தேவர்களை வெல்ல உபாயந்தேடினர். இதனை அறிந்தும் அக்நி அவர்களை அழிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரக்கரின் வன்மை அதிகம் ஆயிற்று. கோபம் கொண்ட இந்திரன் அக்னி தேவனே! நீ வாயுவுடன் கூடி கும்பத்திலிருந்து பிறந்து கடல் நீரைக் குடிக்கக் கடவாய் எனச் சாபம் இட்டான். இஃது அகத்தியரின் பிறப்பிற்குக் காரணம் ஆயிற்று.
    தமிழ்நாட்டைக் கந்தப்பெருமான் அகத்தியருக்குத் தந்தான். அவர் அதனை பாண்டியனுக்கு வழங்கினார்.
    பொன்னி நதியைச் சிவபிரான் அகத்தியருக்கு வழங்கினார். தன் தவத்திற்குத் தொல்லை தந்த மதியநந்தை என்னும் தெய்வப் பெண்ணை மனிதப் பெண்ணாக மாற்றினார். நீரில் படுத்திருந்து பன்னிரெண்டு ஆண்டுகள் தவம் இயற்றினார்.
    மகரிஷிகள் ஒருமுறை மூன்றாண்டுக்காலம் தொடர்ந்து யாகம் செய்தனர். கோபம் கொண்ட தேவர்கள் யாகத்தில் அவிர்ப்பாகம் வாங்கச் செல்லவில்லை. கடும் பஞ்சத்தை உண்டாக்கினர். வளம் குறைந்ததால் யாகத்திற்குப் பொருட்கள் கிடைக்கவில்லை. முனிவர்கள் அகத்தியரை வேண்ட அவர் உத்திரகுருவிலிருந்து பொருள்களை வரவழைத்தார். முனிவர்கள் யாகத்தை நிறைவுடன் நடத்தி திரிமூர்த்திகளுக்கு அவிர்ப்பாகம் கொடுக்கும் தருணத்தில் அஞ்சி நடுங்கிய தேவர்கள் மன்னிப்பு வேண்டி யாக தரிசனம் செய்து அவிர்ப்பாகம் பெற்று மழை பொழிந்து வளம் தந்தனர்.
    ஆதித்ய ஹ்ருதயம் என்னும் மந்திரத்தை ஸ்ரீ ராமனுக்கு உபதேசம் செய்தார் அகத்தியர்.
     சுவேதன் என்பவன் பிணம் தின்னும் சாபம் பெற்று இருந்தான். அகத்தியர் இச்சாபத்தைப் போக்கினார். உதய காலத்தில் அகத்திய நட்சத்திரம் ஆகாயத்தில் இருந்து கொண்டு கடல்நீரை வற்றச் செய்கிறது.
     துட்பண்ணியன் என்பான் பேயாய் இருந்த சாபத்தையும், இந்திர சாபத்தால் பூமியில் பிறந்து வாடிய அரம்பையின் சாபத்தையும் அகத்தியர் போக்கினார்.
     தீர்த்த யாத்திரை செய்த அர்ச்சுனன் அகத்திய தீர்த்தத்தில் புனிதநீர் ஆடினான். அகத்தியரால் ஸ்தாபிக்கப் பெற்ற லிங்கம் அகத்தியலிங்கம் எனப்படும். தமிழ்நாட்டிற்கு காவிரி கிடைத்தது அகத்தியரால்தான்.இவற்றில் அகத்தியரின் அளவற்ற பெருமைகள் விளங்கும்