திங்கள், 27 மே, 2013


                          மகான்கள் : ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்



Ramakrishna Paramahansaவிவேகானந்தர் உட்பட பல சாதுக்களின் குருவாகவும், மெய்யறிவு பெற்ற ஞானியாகவும் விளங்கியவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். அவர் தட்சிணேசுவரத்தில் உள்ள காளி கோயிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்த காலம். அப்போது அவ்வாலயத்தின் நிர்வாகியாக ராணி ராசமணி தேவியின் மருமகன் மதுர்பாபு இருந்து வந்தார். அவர், பரமஹம்சரைக் கடவுள் அவதாரமாகவே கருதி வணங்கி வந்தார்.
ஒரு நாள் ராமகிருஷ்ணர் தனது அறையின் முன் உள்ள வராந்தாவில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார். அவர் நடைபயிலுவதை தூரத்தில் தன் அறையில் இருந்தவாறே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மதுர்பாபு. அப்போது திடீரென அங்கே பரமஹம்சரின் உருவத்துக்குப் பதில் காளியின் உருவம் நடமாடுவது தெரிந்தது. நம்பமுடியாமல் கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தார் மதுர்பாபு. ஆம், அங்கே காளிதான் நடமாடிக் கொண்டிருந்தார். மறுகோடிக்குச் சென்று திரும்பியதும் காளி உருவம் மறைந்தது. சிவன் உருவம் தோன்றியது. பகவான் ராமகிருஷ்ணர் காளியாகவும் சிவனாகவும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தார். மதுர்பாபு அளவிலா ஆச்சரியம் அடைந்தார். தான் பார்ப்பது உண்மைதானா அல்லது கனவா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. அறைக்கு வெளியே வந்து மீண்டும் உற்றுப் பார்த்தார். அங்கே சிவனும் சக்தியும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தனர். பகவான் ராமகிருஷ்ணர் அங்கே சிவசக்தி சொரூபமாய்க் காட்சி அளித்தார்.
சற்று நேரம் கழித்து ராமகிருஷ்ணர் அறைக்குத் திரும்பியவுடன் தான் கண்ட காட்சியைப் பற்றி எடுத்துரைத்தார் மதுர்பாபு. குருதேவர் அதனை ‘ஆம்’ என்று ஒப்புக்கொள்ளவுமில்லை. ‘இல்லை’ என்று மறுக்கவுமில்லை. ‘எனக்கு ஏதும் தெரியாது!, எல்லாம் பகவான் செயல்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். தான் கண்ட உண்மையைப் பலரிடமும் கூறி ஆச்சர்யப்பட்டார் மதுர்பாபு.
‘ராமனாகவும் கிருஷ்ணனாகவும் வந்தவன் எவனோ, அவனே ராமகிருஷ்ணனாக வந்திருக்கிறான்!’ என்று விவேகானந்தருக்குத் தமது அவதார ரகசியத்தை வெளியிட்ட மகா புருஷர் அல்லவா அவர்.
2. சுவாமி விவேகானந்தர்
Swami Vivekanandaஇந்து சமயத்தின் எழுச்சிக்கும், உயர்வுக்கும் வித்திட்ட வீரத்துறவி சுவாமி விவேகானந்தர். ‘ஒருவன் தேவையில்லாமல் உன் ஒரு கன்னத்தில் அறைந்தால் நீ அவனது இரண்டு கன்னங்களையும் திருப்பித் தாக்கு’ என வீரக் குரல் எழுப்பியவர். இளைஞர்களிடையே தேசபக்தியையும், விழிப்புணர்ச்சியையும் தூண்டியவர். சேவை ஒன்றே இறைவனை அடையும் வழி என்று இந்த உலகுக்கு உணர்த்தியவர்.
1893 ஆம் ஆண்டு. சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவாற்றச் சிகாகோ சென்றிருந்த நேரம். சர்வ சமயங்களின் மகாநாட்டிற்குச் செல்வதற்காக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார் அவர். அப்போது எதிரே டிக்கின்ஸன் என்ற இளைஞர் தன் தாயாருடன் நடந்து வந்து கொண்டிருந்தார். சுவாமி விவேகானந்தரைப் பார்த்தவுடன் அந்த இளைஞருக்கு சொல்லலொணாப் பரவசநிலை உண்டாயிற்று. தாம் சிறு வயதில் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தபோது தமக்குக் காட்சி அளித்த உருவம் இதுவே என்பதையும், தம்மைக் காப்பாற்றியது இவர்தாம் என்பதையும் உணர்ந்த டிக்கின்ஸன், ஆச்சரியத்துடன் தன் தாயாரிடம் அதுபற்றித் தெரிவித்தார். பின்னர், அவர்தான் சுவாமி விவேகானந்தர் என்பதையும், அவர் இந்தியாவிலிருந்து சமயங்களின் பாராளுமன்றத்தில் உரையாற்ற வந்திருப்பதையும் அறிந்து கொண்டார்.
ஆர்வத்துடன் சுவாமிகளைப் பின்தொடர்ந்து சென்று, மாநாட்டின் முடிவில் அவரைச் சந்தித்தார் டிக்கின்ஸன். சுவாமி விவேகானந்தர் புன்முறுவல் பூத்த முகத்துடன் டிக்கின்ஸனை நோக்கி, ‘நீ எப்பொழுதும் தண்ணீரை விட்டுச் சற்று விலகியே இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்’ என்று கூறினார். சிறுவனாக இருந்தபோது நடந்த, தனக்கு மட்டுமே தெரிந்த அந்த அதிசயச் சம்பவத்தைப்பற்றி விவேகானந்தர் கூறக் கேட்டதும் ஆச்சர்யமடைந்தார் டிக்கின்ஸன். உடனே மனதுக்குள் ‘இவரே எனக்கு குருவாக இருந்து வழிநடத்த வேண்டும்’ என்றும் நினைத்துக் கொண்டார். அதை டிக்கின்ஸன் சொல்லாமலேயே உணர்ந்து கொண்ட விவேகானந்தர், ‘ என் அன்பு மகனே! நான் உன் குரு அல்ல; உன் குரு பின்னால் வருவார். உனக்கு வெள்ளிக் கிண்ணம் ஒன்றையும் பரிசாகத் தருவார். இப்பொழுது உன்னால் தாங்கிக் கொள்ள முடிந்ததை விட மிக அதிகமான அருளாசிகளை உன்மேல் பொழிவார்’ என்று கூறி ஆசிர்வதித்தார். டிக்கின்ஸனும் சுவாமி விவேகானந்தரை வணங்கி விடைபெற்றார்.
இச்சம்பவம் நிகழ்ந்து 32 ஆண்டுகள் கழிந்த நிலையில் சுவாமி விவேகானந்தர், டிக்கின்ஸனிடம் கூறியது உண்மையானது. 1925ஆம் ஆண்டில் டிக்கின்ஸன் இந்தியாவின் மற்றொரு மாபெரும் யோகியான பரமஹம்ச யோகானந்தரைச் சந்தித்தபொழுது, அவர் டிக்கின்ஸனுக்கு வெள்ளிக் கிண்ணம் ஒன்றைப் பரிசாக அளித்ததுடன், தமது சீடராகவும் ஏற்றுக்கொண்டார்.
இவ்வாறு பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவற்றையும், பின்னால் நிகழப் போவதைப் பற்றியும் அறிந்த அளப்பரிய ஆற்றல் கொண்டவராக சுவாமி விவேகானந்தர் விளங்கினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக