(வாழ்க்கை வரலாறும் போதனைகளும்)
பகவத் பிரேமையை பரப்ப வந்த தூதரும், பகவந் நாம சங்கீர்த்தன முறையின் தந்தையுமான பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, வங்காளத்திலுள்ள நவத்வீப நகரத்தின் ஒரு பகுதியாகிய ஸ்ரீதாம மாயாப்பூரில், 1407 சகாப்த ஆண்டு (பெப்ரவரி, 1486-ம் ஆண்டு) ஃபால்குணி பௌர்ணமியின் மாலை நேரத்தில் அவதரித்தார். அவரது தந்தையான, ஸ்ரீ ஜகன்னாத் மிஸ்ரர், சில்ஹட் மாகாணத்தில் ஒரு கற்றறிந்த பிராமணராக இருந்தார். அச்சமயத்தில் நவத்வீபம் கல்விக்கும், கலாசாரத்திற்கும் பெயர்பெற்ற இடமாகத் திகழ்ந்ததால், அவர் தமது கல்வியைத் தொடர்வதற்காக நவத்வீபத்திற்கு வந்து சேர்ந்தார். ஸ்ரீல நீலாம்பர சக்கரவர்த்தி நவத்வீபத்தைச் சேர்ந்த சிறந்த பண்டிதராவார். அவரது மகளான ஸ்ரீமதி சச்சிதேவியைத் திருமணம் செய்து கொண்ட பின், அவர் கங்கைக் கரையில் குடியேறினார்.
ஜகந்நாத் மிஸ்ரருக்கும் அவரது மனைவியான ஸ்ரீமதி சச்சிதேவிக்கும் சில பெண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் பெரும்பான்மையினர் இளம் வயதிலேயே இறந்து விட்டனர். இறுதியில் பெற்றோரின் பாசத்தை அனுபவிக்க ஸ்ரீ விஸ்வரூபர் மற்றும் விஸ்வம்பரர் ஆகிய இரு புத்திரர்கள் மட்டுமே மிஞ்சினர். அவர்களில் பத்தாவதாகப் பிறந்தவரும், இளையவருமான விஸ்வம்பரர் வேப்ப மரத்தடியில் பிறந்ததனால் பிற்காலத்தில் நிமாய் பண்டிதர் என்றும், அதன்பிறகு துறவற வாழ்வை ஏற்றபின், பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு என்றும் அழைக்கப்பட்டார். நாற்பத்தெட்டு ஆண்டுகளாக பல உன்னதமான செயல்களை வெளிப்படுத்திய பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, 1455 சகாப்த ஆண்டில் பூரியில் மறைந்தருளினார்.
அவரது முதல் இருபத்துநான்கு ஆண்டுகளை அவர் நவத்வீபத்தில் மாணவராகவும், குடும்பஸ்தராகவும் கழித்தார். அவரது மனைவியான ஸ்ரீமதி லக்ஷ்மிபிரியா, பகவான் வெளியூருக்குச் சென்றிருந்த சமயத்தில் இளம்வயதிலேயே இறந்துபோனார். கிழக்கு வங்காளத்திலிருந்து அவர் திரும்பி வந்ததும், அவரது தாயாரின் வேண்டுகோளின்படி, இரண்டாவது மனைவியாக ஸ்ரீமதி விஷ்ணுபிரியா தேவியை அவர் திருமணம் செய்து கொண்டார். பகவான் இருபத்து நான்கு வயதில் துறவறம் மேற்கொண்டபொழுது, விஷ்ணுபிரியா தேவிக்கு பதினாறு வயதே நிரம்பியிருந்தது. இதனால் அவரது வாழ்நாள் முழுவதும் அவர் பிரபுவின் பிரிவுத் துயருடனேயே வாழ்ந்து வந்தார்.
சந்நியாசம் ஏற்ற பகவான், தமது தாயாரான ஸ்ரீமதி சச்சிதேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஜகந்நாத் பூரியையே தமது தலைமையமாகக் கொண்டார். 24 ஆண்டுகள் பகவான் பூரியிலேயே தங்கியிருந்தார். இதில் ஆறு வருடங்களுக்கு அவர் இந்தியா முழுவதும், குறிப்பாகத் தென்னிந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ஸ்ரீமத் பாகவதத்தைப் பிரசாரம் செய்தார். பகவான் சைதன்யர் ஸ்ரீமத் பாகவதத்தைப் பிரசாரம் செய்ததுடன், பகவத் கீதையின் போதனைகளையும் நடைமுறைக்கு ஏற்ற வகையில் பிரசாரம் செய்தார். பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் முழுமுதற் கடவுளாக சித்தரிக்கப்படுகிறார். மேலும் ஒருவர் எல்லா வகையான வழிபாட்டு முறைகளையும் கைவிட்டு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒருவரை மட்டுமே வழிபாட்டுக்குரிய மூர்த்தியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே கீதையில் பகவானுடைய கடைசி உபதேசமாகும். பகவானுடைய பக்தர்கள் எல்லா வகையான பாவ விளைவுகளிலிருந்தும் காப்பாற்றப் படுவார்கள் என்றும், கவலைப்படக் காரணமில்லை என:றும் பிறகு பகவான் உறுதியளிக்கிறார்.
துரதிஷ்டவசமாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நேரடியாக உத்தரவுகளையும், கீதையின் போதனைகளையும் அளித்திருந்த போதிலும், அறிவற்றவர்கள் அவரை சரித்திரப் புகழ்பெற்ற மனிதராக தப்பாகப் புரிந்து கொண்டுள்ளனர். இதனால் அவரை ஆதியான பரமபுருஷ பகவானாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இத்தகைய அறிவற்ற மனிதர்கள் பக்தரல்லாதவர்களால் தவறான வழியில் செலுத்தப்படுகின்றனர். இவ்வாறாக பகவத் கீதையின் போதனைகள் பெரும் பண்டிதர்களாலும் கூட தப்பாக விளக்கப் படுகின்றன. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகு கற்றறிந்த பண்டிதர்கள் கீதைக்கு நூற்றுக்கணக்கான உரைகளை எழுதியுள்ளனர். ஆனால் அவற்றில் பெருமபாலான உரைகள் சுயநல நோக்கத்துடன் எழுதியவையாகும்.
ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகாபிரபு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரேயாவார். ஆனால், இம்முறை அவர் பொதுமக்கள், சமயவாதிகள் மற்றும் தத்துவவாதிகள் ஆகியோருக்கு, ஆதிபுருஷரும், சர்வ காரணங்களுக்கும் காரணமானவருமான பகவன் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னதமான நிலையைப் பற்றி பிரசாரம் செய்வதற்காக மிகச்சிறந்த பகவத் பக்தராக அவர் தோன்றினார். பிருந்தாவனத்தில் நந்த மகாராஜனின் புதல்வராகத் தோன்றிய ஸ்ரீ கிருஷ்ணரே பரமபுருஷ பகவான் என்பதால் அவரே எல்லோருடைய வழிபாட்டுக்கும் உரியவர் என்பதே அவரது பிரசாரத்தின் சாராம்சமாகும். பிருந்தாவனம் பகவானிலிருந்து வேறுபட்டதல்ல. ஏனெனில் பகவானுடைய பெயர், புகழ், உருவம் மற்றும் அவர் அவதரிக்கும் இடம் ஆகிய அனைத்தும் பகவானுடன் எல்லா விதத்திலும் ஒத்திருக்கின்றன. எனவே பகவானைப் போலவே பிருந்தாவனமும் வழிபடத் தகுந்ததாகும். பகவானிடம் தூய அன்பு கொண்டு அவரை வழிபடுவதே, மிகவுயர்ந்த உன்னதமான வழிபாட்டு முறையாகும்.
பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவும் இதுதான் மிகச்சிறந்த வழிபாட்டு முறை என்று சிபாரிசு செய்கிறார். ஸ்ரீமத் பாகவத புராணமே பகவானைப் புரிந்து கொள்வதற்குரிய குறையற்ற இலக்கியம் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். மேலும் பிரேமை நிலையை, அல்லது பகவத் பிரேமையை அடைவதே மனிதனின் முடிவான நோக்கம் என்பதையும் அவர் பிரசாரம் செய்தார்.
பகவான் ஸ்ரீ சைதன்யரின் பக்தர்களான ஸ்ரீல விருந்தாவனதாஸ் தாகுரர், ஸ்ரீ லோசன் தாஸ் தாகுரர், ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி, ஸ்ரீ கவிகர்ணபுரர், ஸ்ரீ பிரபோதானந்த சரஸ்வதி, ஸ்ரீ ரூப கோஸ்வாமி, ஸ்ரீ சனாதன கோஸ்வாமி, ஸ்ரீ கோபாலப்பட்ட கோஸ்வாமி, ஸ்ரீ ஜீவ கோஸ்வாமி, ஸ்ரீ ரகுநாதபட்ட கோஸ்வாமி, ஸ்ரீ ரகுநாத்தாஸ் கோஸ்வாமி ஆகியோரும், கடந்த இருநூறு ஆண்டுகளுக்குள் தோன்றியவர்களான ஸ்ரீ விஸ்வநாத சக்கரவர்தி தாகுரர், ஸ்ரீ பலதேவ வித்யாபூஷணர், ஸ்ரீ சியாமானந்த கோஸ்வாமி, ஸ்ரீ நரோத்தம தாஸ் தாகுரர், ஸ்ரீல பக்திவிநோத் தாகுரர் மற்றும் இறுதியாக ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகுரர் ஆகியோரும், மற்றும் பல புகழ்பெற்ற பண்டிதர்களும், பக்தர்களும் பகவான் சைதன்யரின் வாழ்வையும், போதனைகளையும் பற்றிய பல நூல்களையும், இலக்கியங்களையும் தயாரித்துள்ளனர். இத்தகைய நூல்கள் அனைத்தும், வேதங்கள், புராணங்கள், உப நிஷதங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற சாஸ்திரங்களையும் ஆதாரமாகக் கொண்டுள்ளன. மேலும் அங்கீகரிக்கப்பட்ட ஆச்சாரியார்களாலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளன. இவை தனித்தன்மை வாய்ந்த ஒப்பற்ற ஞான நூல்களாகும். துரதிஷ்டவசமாக இந்நூல்களைப் பற்றி உலக மக்கள் இன்னும் அறியாமலேயே உள்ளனர். ஆனால் பெரும்பாலும் சமஸ்கிருத மற்றும் வங்காள மொழிகளிலேயே உள்ள இந்த இலக்கியங்கள் உலக மக்களின் கவனத்திற்கு வந்து, சிந்திக்கத் தெரிந்த மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் காலம் விரைவில் வரும். அப்போது இந்தியாவின் பெருமையும், அதன் அன்புச் செய்தியும் உலகையே மூழ்கடித்து விடும்.
பகவான் சைதன்யரின் வாழ்க்கை மற்றும் உபதேசங்களைப் பற்றிய இச்சிறு விளக்கத்தைப் படிப்பவர்கள், ஸ்ரீல விருந்தாவனதாஸ் தாகுரர் (ஸ்ரீ சைதன்ய பாகவதம்) மற்றும் ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி (ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம்) ஆகியோரின் நூல்களைப் படிப்பதால் பெரிதும் நன்மையடைவார்கள். பகவான் சைதன்யரின் ஆரம்ப வாழ்வைப் பற்றி சைதன்ய பாகவதத்தின் ஆசிரியர் மிகவும் அற்புதமாக வர்ணித்துள்ளார். மேலும் சைதன்யரின் உபதேசங்களைப் பொறுத்தவரை அவை சைதன்ய சரிதாம்ருதத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இப்பொழுது இவ்வுபதேசங்களைக் கொண்ட நூல், பகவான் சைதன்யரின் போதனைகள் (Teachings of Lord Caitanya) எனும் பெயரில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. பகவான் சைதன்யரின் சம காலத்தவரும், அவரது முக்கியமான பக்தர்களில் ஒருவருமான ஸ்ரீல முராரி குப்தர் பகவானின் இளவயது வாழ்வை குறித்து வைத்துள்ளார். இவர் அக்காலத்தில் ஒரு மருத்துவராக இருந்தார். மேலும் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் பிற்பகுதி வாழ்வு ஸ்ரீ தாமோதர கோஸ்வாமி, அல்லது ஸ்ரீல சொரூப தாமோதரரால் குறித்து வைக்கப்பட்டுள்ளது. இவர் ஸ்ரீ சைதன்யரின் அந்தரங்கச் செயலாளரும், பூரியில் அவரது இணைபிரியா தோழரமாக இருந்தார். இவ்விரு பக்தர்களும், ஸ்ரீ சைதன்யரின் எல்லா நடவடிக்கைகளைப் பற்றியும் குறித்து வைத்துள்ளனர். பிற்காலத்தில், ஸ்ரீல தாமோதர கோஸ்வாமி முராரி குப்தர் ஆகியோரின் குறிப்புப் புத்தகங்களை (கடசா) ஆதாரமாகக் கொண்டுதான், மேற்குறிப்பிட்ட பகவான் சைதன்யரைப் பற்றிய நூல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டன.
எனவே பகவான் சைதன்யர், 1407 சகாப்த ஆண்டில் (1486-ம் ஆண்டு), ஃபல்குணி பௌர்ணமி தினத்தன்று மாலை நேரத்தில் அவதரித்தார். பகவானின் விருப்பப்படி அன்று மாலை சந்திர கிரகணமாக இருந்தது. கிரகண நேரத்தில் கங்கையிலோ, மற்ற புண்ணிய நதிகளில் நீராடி, தூய்மைக்காக வேத மந்திரங்களை உச்சரிப்பது இந்துக்களின் வழக்கமாகும். இந்த சந்திர கிரகணத்தின்போது தான் பகவான் ஸ்ரீ சைதன்யரும் அவதரித்தார். அப்பொழுது, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே எனும் புனிதமான ஓசை இந்தியா முழுவதிலும் முழங்கியது. பகவானின் பதினாறு நாமங்களைக் கொண்ட இம்மந்திரம் பல புராணங்களிலும், உபநிஷதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மந்திரம் கலியுகத்தின் (தாரக ப்ரஹ்ம நாம) தாரக மந்திரம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. பகவானின் இப்புனித நாமங்களை குற்றமில்லாமல் ஜெபிப்பதால் அது வீழ்ந்த ஆத்மாவை பௌதிக பந்தத்திலிருந்து விடுவிக்கும் என்று சாஸ்திரங்களில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. பகவானின் எண்ணற்ற நாமங்கள் இந்தியாவிலும், வெளியிலும் உள்ளன. அப்பெயர்கள் அனைத்தும் பரமபுருஷ பகவானையே குறிப்பிடுகின்றன என்பதால், அவற்றை ஜெபிப்பதால் சமமான நன்மையைப் பெறலாம். ஆனால் இப்பதினாறு நாமங்கள் குறிப்பாக இக்கலியுகத்திற்காகவே சிபாரிசு செய்யப்பட்டிருப்பதால், மக்கள் இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் வேத சாஸ்திரங்களின் விதிகளைப் பயிற்சி செய்து வெற்றி பெற்ற சிறந்த ஆசார்யர்களின் வழியையும் அவர்கள் பின்பற்ற வேண்டும். பகவானின் அவதாரமும், சந்திர கிரகணமும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தது பகவானின் விசேஷமான அவதார நோக்கத்தையே சுட்டிக்காட்டுகிறது. இக்கலியுகத்தில் பகவானின் புனித நாமங்களைப் பாடுவதன் முக்கியத்துவத்தைப் பிரசாரம் செய்வதே இந்த நோக்கமாகும். இந்த யுகத்தில் அற்ப விஷயங்களுக்கும் சண்டைகள் மூள்கின்றன. எனவேதான் சாஸ்திரங்கள் தன்னுனர்வு பெறுவதற்குப் பொதுவான ஒரு வழியை சிபாரிசு செய்கின்றன. அது பகவானின் புனித நாமத்தைப் பாடுவதாகும். மக்கள் ஒன்றுகூடி, அவரவர் மொழிகளில், காதுக்கினிய பாடல்களால் பகவானை போற்றிப் புகழலாம். இதை குற்றமில்லாமல் செய்தால், பங்கேற்பவர் படிப்படியாக ஆன்மீக பக்குவத்தை அடைவது நிச்சயம். வேறு கடினமான முறைகளைப் பின்பற்ற வேண்டியதில்லை. இத்தகைய கூட்டங்களில், அறிவாளிகள், அறிவற்றவர்கள், பணக்காரர்கள், ஏழை, இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம், ஐரோப்பியர்கள், ஆங்கிலேயர்கள், இந்தியர்கள், பிராமணர்கள், மற்றும் அனைவரும் உன்னதமான ஓசைகளைக் கேட்டு, இதயத்திலுள்ள அழுக்குகளை தூய்மைப்படுத்திக் கொள்ளலாம். பகவானின் அவதார நோக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், உலக மக்கள் அனைவரும் பகவானின் புனித நாமங்களை ஏற்று, நாம சங்கீர்த்தனம் எனும் ஒரே மதத்தை தழுவிக் கொள்வார்கள். அதாவது, பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் அவதாரத்துடன் அவரது புனித நாமம் அவதரித்துள்ளது.
அவர் தமது தாயின் மடியில் குழந்தையாக இருந்தபொழுது, அவரைச் சுற்றியிருந்த பெண்கள் கைகளைத் தட்டிக்கொண்டு புனித நாமங்களபை; பாடிய உயனேயே, அவர் அழுவதை நிறுத்திவிடுவார். இச்சம்பவத்தை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வியப்போடும், மரியாதையோடும் கண்டு களித்தனர். சில சமயங்களில் இளம் பெண்கள் பகவானை அழவைத்து, பிறகு புனித நாமங்களைச் சொல்லி அவரது அழுகையை நிறுத்துவதில் ஆனந்தம் அடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக