சனி, 4 மே, 2013



வேண்டும் வரம் கொடுக்கும் வெண்காடு


                  "ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீ மாயூரம் மார்ஜுனம்
                   சாயாவனம்ச ஸ்ரீ வாஞ்சியம் காசீ க்ஷேத்ர ஸமாநிஷட் "
என்ற வாக்கியத்தால்  காசிக்குச் சமானமாகக் கூறப்படும் ஸ்தலங்கள் ஆறு என்பதைத்  தெரிந்து கொள்கிறோம். இவை, திருவெண்காடு, திருவையாறு,மயிலாடுதுறை, திருவிடைமருதூர் , சாயாவனம் என்கிற திருச்சாய்க்காடு ,திருவாஞ்சியம்  என்பன ஆகும். இத்தலங்களைக் காசியோடு சம்பந்தப்படுத்திப் பேசுவானேன் என்றால், இவை யாவும் காசியைப்போல் முக்தியைத் தரவல்லவை  என்பதால்தான். இவற்றிலும், மாயூரத்தில் காசி விஸ்வநாதர் ஆலயங்களும் , காசியைப் போலவே டுண்டி கணபதி மற்றும் கால பைரவர் சன்னதிகளும் உள்ளன. மேலே சொல்லப்பட்ட ஸ்தலவரிசை ஆறில், முதலாவதாகச்  சொல்லப்பட்டு இருப்பது, ஸ்வேதாரண்யம்  எனப்படும் திருவெண்காடு ஆகும்.

வால்மீகி ராமாயணத்தில் ஸ்வேதாரண்யம் குறிப்பிடப்பட்டுள்ளது.இங்கு சிவ சன்னதிகள்  மூன்று: ஸ்வேதாரண்யேச்வரர் (மூலஸ்தானம்), நடராஜ மூர்த்தி, அகோர மூர்த்தி. மூலவரை  தேவேந்திரன், ஐராவதம்  என்கிற வெள்ளை யானை, மஹாவிஷ்ணு, சூரியன், சந்திரன்,அக்னி , ச்வேத கேது, சுவேதன்  ஆகியோர் பூஜித்துள்ளனர். தேவார மூவரும் சுவாமியின் மீது பதிகங்கள் பாடியிருக்கிறார்கள். திருவாசகத்திலும்திருக்கோவையாரிலும்  இத்  தலம் மாணிக்கவாசகரால் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தாலக முனிவரின்  எட்டு வயது குமாரனான ச்வேதகேதுவின்  உயிரைப் பறிக்கவேண்டி யமன் பாசக் கயிற்றை வீசியபோது  சுவாமி வெளிப்பட்டுக்  கால- சம்ஹாரம் செய்ததாக  ஸ்தலபுராணம் சொல்கிறது.

ஆதி சிதம்பரம் என்று இந்த ஊர் குறிப்பிடப்படுகிறது. சபை அமைப்பும் சிதம்பரத்தைப் போலவே இருக்கிறது. அருகில் ச்வேதவனப் பெருமாள் சன்னதியும் இருக்கிறது. நவ தாண்டவங்களை ( ஆனந்த தாண்டவம், காளி ந்ருத்தம், கௌரீ தாண்டவம், முனி ந்ருத்தம், சந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம் , புஜங்க லலிதம், சம்ஹார தாண்டவம், பைஷாடனம்)நடராஜ மூர்த்தி இங்கு  ஆடினாராம். சிதம்பரத்தில் சகுணமாக ஆடி முக்தியைத் தரும் மூர்த்தி, இங்கு நிற்குணமாக ஆடி இம்மைக்கும் மறுமைக்கும்  பலன்களை அளிக்கிறார்.இவரது காலில் பதினான்கு சலங்கைகள் உள்ள காப்பு காணப்படுகிறது. பதினான்கு புவனங்களும் அவர் அசைந்தால் மட்டுமே அசையும் என்பதை இது காட்டுகிறது. இடுப்பில் அணிந்துள்ள  81 வளையங்கள்   உள்ள அரை ஞாண், பிரணவம் முதலான  81 பத மந்திரங்களை உணர்த்தும். 28 எலும்பு மணிகளை அணிந்திருப்பது, 28 சதுர் யுகங்கள்  முடிந்திருப்பதைக்  காட்டுகிறது.கூர்ம- வராக அவதாரங்களை அடக்கி அவற்றின் அடையாளமாக ஆமையின் ஓட்டையும், பன்றிக் கொம்பையும் மார்பில் அணிந்திருக்கிறார். ஜடாமுடி பதினாறு கலைகளை உணர்த்துவதாக உள்ளது. அதில் 15 சடைகள் பின்னால் தொங்குகின்றன.  ஒன்றுமட்டும் கட்டப்பட்டுள்ளது.   திரு முடியில் மயில் பீலியும், கங்கையும்,இளம் பிறைச் சந்திரனும்,  ஊமத்தம் பூவும், வெள்ளெருக்கும்  இருக்கின்றன.  நெற்றிக்கண் அழகாகத் தெரிகிறது. சிதம்பரத்தைப் போலவே, ரஹஸ்யமும், ஸ்படிகலிங்க பூஜையும் நடைபெறுகின்றன.

தேவர்களைத் துன்புறுத்திவந்த மருத்துவாசுரனை  அடக்குவதற்கு சுவாமியின் கோபத்திலிருந்து வெளிப்பட்ட அகோர மூர்த்தியின் சன்னதி பிரபலமானது. அசுரன் மீது போருக்குச் சென்ற ரிஷப தேவர் , காயப்பட்டதால் கோபமடைந்த பரமேச்வரன், அகோர மூர்த்தியாக, சூலம் ஏந்தி வருவதைக்கண்ட  அசுரன் , சரணாகதி அடைந்து தோத்திரம் செய்தான். இவர்  இடது காலை முன்வைத்து, வலது கால்  கட்டை விரலையும்,அதற்கு அடுத்த விரலையும் ஊன்றி, நடக்கும் கோலத்தில்எட்டுக் கரங்களுடன்  காட்சி அளிக்கிறார். கைகளில் வேதாளம்,கத்தி,உடுக்கை,  கபாலம் ,கேடயம், மணி, திரிசூலம் ஆகியவற்றைத் தாங்கியவராக, ஜ்வாலாகேசத்துடன் , நெற்றிக் கண்ணுடனும்,கோரைப்  பற்களுடனும், 14 பாம்புகளைப் பூண்டவராய் ,கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். மாசி மாதம், கிருஷ்ணபக்ஷ பிரதமை, ஞாயிற்றுக் கிழமை, பூர நக்ஷத்திரம் கூடிய நாளன்று அகோர மூர்த்தி தோன்றியதாகக் கூறப்படுகிறது. பிரதி ஞாயிறுகளிலும்- குறிப்பாக கார்த்திகை ஞாயிறுகளில் அகோர பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.மாசி மாத பிரமோத்ஸசவத்தில் , பூர நக்ஷத்திரத்தில் அகோர மூர்த்திக்கு விசேஷ அபிஷேகமும், வீதி உலாவும் நடைபெறுகிறது.
 
வெளிப்ராகாரத்தில் வடமேற்கு மூலையில், தனி உள் ப்ராகாரத்துடன் பிரம்மவித்யாம்பிகையின் சன்னதி கிழக்கு நோக்கு அமைந்துள்ளது. பிரமனுக்கு வித்தையை உபதேசித்ததால் இப்பெயர் வந்தது. திருநாங்கூரில் மதங்க முனிவரின் புதல்வியாகத் தோன்றிய அம்பிகை, தவம்  செய்து. ஈச்வரனைத் திருவெண்காட்டில் மணந்து கொண்டதாகப் பாத்ம புராணம் கூறுகிறது. பின் இரு கரங்களில் தாமரையும், அக்ஷ மாலையும் ஏந்தி, முன்னிருகரங்கள் அபய- வரதமாகக் அருட்-   காட்சி வழங்குகிறாள் அம்பிகை.
நவக்ரகங்களுள் ஒருவரும், வித்யாகாரகன்,மாதூலகாரகன், என்றெல்லாம் வழங்கப்படும் புதனுக்குத்  தனி சன்னதி, அம்பாள் சன்னதிக்கு வெளியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கல்வி,புத்திர பாக்கியம் வேண்டுவோர், இங்கு சாந்தி செய்து கொள்கிறார்கள்.

கோயிலுக்கு உள்ளேயே, மிகப்பழமையான மூன்று திருக்குளங்கள் உள்ளன.அக்னி தீர்த்தம், கொடிமரத்தின் அருகில் உள்ளது. இதன் கரையில், சைவ சித்தாந்த நூலான "சிவ ஞான போத"த்தை அருளிய மெய்கண்டாருக்கு சன்னதி உள்ளது. இவரது தந்தை அச்சுத களப்பாளர் என்பவர், நெடுங்காலமாகக் குழந்தைப்பேறு இல்லாததால், திருமுறையில் கயிறு சார்த்திப் பார்த்தபோது, இத்தலத்தின்மீது திருஞான சம்பந்தர் பாடிய, "கண்காட்டு நுதலானும்" என்ற பதிகம் வந்தது. அதில் இரண்டாவது பாடலில், இங்குள்ள முக்குளங்களில் நீராடிப் பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் , இதில் சந்தேகப்பட வேண்டாம் என்று இருந்ததால் , அதன்படியே அவரும் இங்கு வந்து முக்குளத்தில் நீராடி, நியமத்தோடு இறைவனை வழிபட்டதால், மெய்கண்டார் என்ற சிவஞானக் குழந்தையை மகவாகப் பெற்றார். இன்றும் இப்பதிகத்தை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது அனுபவத்தால் கண்ட உண்மை.

அக்னி தீர்த்தத்திற்கு அப்பால் வெளிப் பிராகாரத்தில் சூரிய தீர்த்தமும், அம்பாள் சன்னதிக்கு எதிரில் சந்திர தீர்த்தமும் உள்ளன. மூன்று தீர்த்தங்களைப் போல மூன்று வ்ருக்ஷங்கள் - ஆல், கொன்றை, வில்வம் ஆகியவை உள்ளன. இவற்றுள், ஆல வ்ருக்ஷத்தின் அடியில் ருத்ர பாதம் இருக்கிறது. இது பித்ருக் கடன் செய்ய உத்தமமான இடம். வில்வ வ்ருக்ஷத்தின் அடியில் பிரம்ம சமாதி உள்ளது. மேற்கு ராஜ கோபுரத்தின் அருகில் நூற்றுக்கால் மண்டபமும் அதனுள் சண்முகர் சன்னதியும் உள்ளன.

சுவாமியின் உள் பிராகாரத்தில் வடக்கு நோக்கிய பத்ரகாளியும், மேற்கு நோக்கிய துர்கையும் பெரிய மூர்த்தங்கள். இதைத்தவிர, சோமாஸ்கந்தர் சன்னதி, அறுபத்துமூவர்,பெரிய வாரணப் பிள்ளையார்,பால சுப்பிரமணியர் , அகோரமூர்த்தி (உத்சவர்) ஆகிய சன்னதிகளைக் காணலாம்.

பிற செய்திகள்:
சம்பந்தர் இங்கு வந்தபோது, ஊரெல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி அளித்ததால், அம்பாள் அவரைத் தன் இடுப்பில் தாங்கிவந்து சுவாமி தரிசனம் செய்வித்தாள் என்பது செவிவழிச் செய்தி. அதே கோலத்தில் "பிள்ளை இடுக்கி அம்மன்" என்ற பெயரில் அம்பாள் பிரகாரத்தில் நமக்குத் தரிசனம் தருகிறாள் அன்னை.

 அருகிலுள்ள கிராமங்களில் தொற்று நோய் பரவும் போது , யாராவது ஒருவர் மேல் அகோரமூர்த்தி  ஆவேசமாக வந்து, விபூதி கொடுத்தவுடன்  அந்நோய் மறைந்துவிடுமாம்.

  சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி திருவெண்காட்டு நங்கையும், அவரது தோழி சந்தன நங்கையும் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்.

   ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகளாக இருந்த ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இங்கு மணிகர்ணிகா கட்டத்தில் இருக்கிறது.                                                திருவாவடுதுறை ஆதீன எட்டாவது குரு மகா சந்நிதானமாக விளங்கிய மாசிலாமணி தேசிக மூர்த்திகளின் சமாதி , மேல வீதியில் உள்ளது.

   பட்டினத்தடிகள் சிவ தீக்ஷை பெற்ற தலம்.

   கணபதிவழிபாடாகிய காணாபத்யம் பற்றிய நூல்கள்  மறைந்தபோது,                         க்ஷேத்ரபாலபுரத்தைச்  சேர்ந்த ஸ்ரீ  சாம்பசிவ சாஸ்திரிகளுக்கு மீண்டும் அவற்றை அகோர மூர்த்தியே உபதேசித்து, வெளிக்கொனர்ந்ததால், காணாபத்தியர்களின் குரு அகோரமூர்த்தியே ஆவார்.

இக்கோயிலில் சோழ,பாண்டிய,விஜய நகர அரசர்களின் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன.சோழ அரசர்களோடு,அரசியர்களும் இக்கோயிலுக்கு நிவந்தங்களை அளித்துள்ளனர்.தெய்வத் திருமேனிகள் செய்து வைக்கப்பட்டதோடு விளக்கெரிக்கவும், திருவிழாக்கள் நடைபெறவும், நந்தவனம் அமைக்கவும் ,இசைக்கருவிகள் வாசிப்போருக்கும், வேதம் ஒதுவோருக்கும் நிலங்கள் அளிக்கப்பட்டன. கோயில் நிலங்களை வைத்திருந்தோர் மூவர் , சிவத்ரோகிகளாக மாறியதால், அந்நிலங்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

தேவாரப்பாடல் பெற்ற தலங்களான கீழைத் திருக்காட்டுப்பள்ளி,சாயாவனம், பல்லவனீச்வரம், திருவலம்புரம்,கலிக்காமூர், தலைச்சங்காடு ஆகியவை அதன் அருகில் உள்ளன. மணிக்ராமம் என்ற வைப்புத் தலமும் அருகாமையில் உள்ளது.
                 
மயிலாடுதுறையிலிருந்து மங்கைமடம் செல்லும் பேருந்துகளில் வந்தால் கீழ சன்னதியில் இறங்கலாம். சீர்காழியிலிருந்து சுமார்  18 கி. மீ. தொலைவிலுள்ள இத்  தலத்தை   பூம்புகார்  செல்லும் பேருந்துகள் மூலமாகவும் அடையலாம்.
"வெண்காடே வெண்காடே என்பீராகில் வீடாத வல்வினை நோய் வீட்டலாமே" என்று அப்பர் ஸ்வாமிகள் பாடியிருக்கிறபடியால், இத் தலத்தின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே தீராத பாவங்களும் தீரும் , வேண்டியது யாவும் சித்திக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக பிறவிப் பிணி தீர்ந்து முக்தி வரம் கிட்டும். மனிதப்பிறவிக்கு இதற்கு மேலும் வேண்டுவது யாது? திரும்பத் திரும்பத் தரிசிக்கவேண்டிய இந்தத் தலத்தை வாழ்நாளில் ஒருமுறையாவது அவசியம் தரிசிக்க வேண்டும். அந்த பாக்கியத்தை அனைவருக்கும் அளிக்கும் வரம் தரும்படி, பிரம்மவித்யாம்பிகா சமேத ஸ்வேதாரண்யேச்வர பரசிவத்தைப் பிரார்த்திப்போமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக